இலங்கை பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மூவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய தீர்மானங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான ஆணைக்கழு ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு தளபதியான கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இந்த தடை குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
போர் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை விசாரிக்கும் மாறும், அவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் தான் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதியளித்திருந்தார் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதுன், பிரித்தானியா விதித்துள்ள தடை குறித்து தனது நிலைப்பாட்டை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெளிவுப்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் எனது நிலைப்பாட்டை நாட்டிற்கும் உலகிற்கும் சத்தம் போட்டு கூறாவிட்டாலும், இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க வில்லை. விடுதலை புலிகளின் ஆதரவாளர் என என்னை பலரும் தென்னிலங்கையில் விமர்சித்தனர். இருப்பினும் வரலாற்றில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிரான தீர்மானத்தை நான் எடுக்க வில்லை என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு குறித்து கூறுகையில் கூறினார்.
இருப்பினும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்வுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க இருதரப்பும் தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நெருக்கடியான நிலைமை ஏற்படும் என எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையையும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்க சர்வதேச அமைப்புகள் நடவடிக்கைககளை எடுத்துள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கு எதிராக பிரித்தனியா விதித்துள்ள தடையானது வரவிருக்கும் நெருக்கடிகயைன நிலைமைகளை பிரதிபலிப்பதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முழு அதிகாரம் பெற்ற சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.c

