2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முடங்கிப்போன தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நீர் வழங்கல் திட்டம் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்னேவ ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 42 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மே 2022 முதல் இந்தத் திட்டத்தின் பணிகளை மேற்கொண்டு வந்த ( CATIC China Go ) பொறியியல் ஒப்பந்த நிறுவனம் அதன் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. அண்மையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த திட்டம் 2018 இல் தொடங்கிய போது மதிப்பிடப்பட்ட செலவு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.அந்தத் தொகையில் சீன அபிவிருத்தி வங்கி 102 மில்லியன் டொலர்களையும் இலங்கை வங்கி 18 மில்லியன் டொலர்களையும் வழங்க ஒப்புக்கொண்டன.
இத்திட்டத்திற்கு நீர் ஆதாரமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தாலும் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக அதைக் கைவிட்டு அங்கமுவ நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பெற முடிவு செய்யப்பட்டது. இது திட்டத்தின் செலவையும் அதிகரித்துள்ளது.திட்டத்தின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது செலவு தொகையும் அதிகரித்துள்ளது.
சுமார் 85 வீத நிறைவடைந்த இந்த திட்டம் போதுமான நிதி இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முந்தைய அரசாங்கம் இந்தத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது. இதன் விளைவாக மக்கள் அதன் பயனைப் பெற முடியாமல் தவித்தனர்.
அமைச்சர் அமைச்சின் செயலாளர் சீன ஒப்பந்த நிறுவனம் திட்ட இயக்குநர் மற்றும் தேசிய நீர் வழங்கல் அமைப்புச் சபை அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
சீன அபிவிருத்தி வங்கி நிதி வழங்குவதை நிறுத்தி வைத்தது. மேலும் சுமார் 50 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவின் மூலம் அரசாங்கத்திடமிருந்து தேவையான நிதி ஆதாரங்களை வழங்க அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடுகள் பெறப்பட்டதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டத்தின் பலன்கள் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த நிறுவனமும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது

