இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது பணவீக்கத்தை அதன் 5% இலக்கை நோக்கி நகர்த்தும் அதேவேளை, தற்போதைய நாணய நிலைப்பாட்டினை மேற்கோள்காட்டி அதன் ஓரிரவுக் கொள்கை விகிதத்தை 8.00% இல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற நாணய சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியிலான முன்னேற்றங்களை கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போதைய நாணயக் கொள்கையின் நிலைப்பாடு, பணவீக்கம் 5% என்ற இலக்கை நோக்கி நகரும் அதேவேளை உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் எனவும் சபை தெரிவித்துள்ளது.
பணவியல் கொளகை குறித்து அறிக்கை வெளியிட்ட சபையில், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டதன் காரணமாகவே தற்போது பணவீக்கம் எதிர்மறையாக உள்ளது. இவ்வாண்டின் (2025) நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

