தெற்கு சூடான் ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

234 0

தெற்கு சூடானில் இயங்கி வரும் ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு சூடானில் இயங்கி வரும் ஐ.நாவின் ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

‘இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஐ.நா. வளாகத்தின் புனிதத்தன்மையை அனைத்து கட்சிகளும் மதிக்க வேண்டும்’, என ஐ.நா. பணிகளுக்கான தலைவர் டேவிட் ஷியரெர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்குள்ள மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு வேண்டியதை வழங்கவே நாங்கள் இங்கு இருக்கிறோம். இந்த தாக்குதலால் உதவி தேவைப்படுவோருக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவம் குறித்து அங்குள்ள அரசு அதிகாரிகள் சார்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன் மேற்கு நைல் மாநிலத்துடனான தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஜூபா அரசாங்கத்திடம் கோரியிருந்தார். இப்பகுதியையொட்டிய இடங்களில் சுமார் 50,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அபுரோக் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அபயாத்தில் இருப்பதாகவும், இங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிப்போர் எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.