கிரிக்கெட் சபையிடமிருந்து தேசபந்து தென்னக்கோனுக்கு பரிசுப்பொருட்கள்

118 0

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அரச பதவியை வகித்துக் கொண்டு எவ்வாறு கிரிக்கெட் சபையிடமிருந்து நிதி மற்றும் பெறுமதி மிக்க பரிசுகளை பெற முடியும். இதுவொரு இலஞ்ச மோசடியாகும். இச்சம்பவம் தொடர்பில்  முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையை ஊடகங்கள் திரிபுப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் சபை மீதும், அங்குள்ள அதிகாரிகள் மீதும் நான் வைராக்கியத்துடன்  பேசவில்லை. குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு  கிரிக்கெட் சபையை வினைத்திறனாக்குவதற்காகவே  முயற்சிக்கிறோம்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இலங்கை கிரிக்கெட் சபை கொடுப்பனவு மற்றும் பரிசுகளை வழங்கியது என்று குறிப்பிட்டிருந்தேன். தேசபந்துக்கு எவ்விதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்று கிரிக்கெட் சபை புதன்கிழமை (19) அறிவித்துள்ளது.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். பல அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம். தேசபந்து தென்னகோனுக்கு எவ்வித கொடுப்பனவும்  வழங்கவில்லை என்று  கிரிக்கெட் சபை தற்போது குறிப்பிடுகிறது. .

கிரிக்கெட் சபையின்  தற்போதைய உப தலைவர் தலைமையில்  2023.07.31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கிரிக்கெட் சபையில் நிர்வாக குழு கூட்டத்தின் போது தேசபந்து தென்னகோனுக்கு கொடுப்பனவு, 200 லீற்றர் எரிபொருள், தொலைபேசி மற்றும் மடிக்கணனி ஆகியவற்றை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்து ஆவணத்தை சபைக்கு  சமர்ப்பிக்கிறேன்.

கிரிக்கெட் சபையின் உறுப்பினர் தெரிவுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்கு தெரிவில் பங்குப்பற்றுவதை  தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். இந்த அரசாங்கத்தில் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

நீதிமன்றத்தை நாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்வோம். கிரிக்கெட் சபை சிறந்த தீர்மானங்களை எடுக்குமாயின் அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சம்மி சில்வாவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்தியவர்கள் பலர் இன்று வீடுகளில் உள்ளார்கள். மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளார்கள் என்றார்.