ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தர்ம வைத்திய சாலைக்கு வயது நூறு: மார்ச் 22-ம் தேதி நூற்றாண்டு விழா

59 0

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முக்கிய அங்கமான தர்ம வைத்திய சாலையின் நூற்றாண்டு விழா மார்ச் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், 1897-ல் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலால் உருவானது. இம் மடத்தின் முக்கியமான சேவைகளுள் ஒன்றான தர்ம வைத்தியசாலை, 1925-ம் ஆண்டு டாக்டர் பி.ராகவேந்திர ராவால் தொடங்கப்பட்டது. நோயாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவை வழங்குவதே இதன் நோக்கம்.

இந்த மருந்தகத்தில் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ரூபாயில் மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் கிடைக்கும். வெளியில் ரூ.500 வரை செலவாகக் கூடிய, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை போன்றவை இங்கு ரூ.50 கட்டணத்திலேயே செய்து கொள்ளலாம்.

இங்கு, பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், நரம்பியல், எலும்பியல், கண், காது, மூக்கு சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் நோய், இரைப்பை – குடல் நோய், நீரிழிவு சிகிச்சை. இதய நோய் சிகிச்சைக்காக இசிஜி, எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனோ கிராம் போன்ற வசதிகள் உள்ளன.

அதேபோல், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, அக்குபஞ்சர் ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தினமும் 600 முதல் 800 நோயாளிகள் வரை இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த 2023-24-ம் ஆண்டில் மட்டும் 3,41,000 பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 74 பகுதி நேர மருத்துவர்கள், 50 தன்னார்வத் தொண்டர்கள், 14 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, 12 ஆண்டுகளாக, சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் பாதி கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கும் பாதி கட்டண சிகிச்சை வழங்கப்படுகிறது.

சுவாமி தபஸ்யானந்தர் முன்னெடுப்பில், தொழுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் கடந்த 37 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாகத் திகழும் இந்த வைத்தியசாலையில் மார்ச் 22-ம் தேதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இதில், ராமகிருஷ்ண இயக்கத்தின் உலகளாவிய தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் பங்கேற்கிறார். 100 ஆண்டுகளை நிறைவு செய்த இந்த மருத்துவமனையின், சேவையை மேலும் விரிவுபடுத்த, பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.