தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும்

73 0

தேடப்பட்டு வரும் ஏனைய சந்தேகநபர்களைப் போன்றே தேசபந்து தென்னகோன் விவகாரத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும் தீர்மானம் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 6 அதிகாரிகள் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தம்மை கைது செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய அவர்களை கைது செய்யாமலிருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கு இம்மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இது தேசபந்து தென்னகோனுக்கு பொறுந்ததாது.

குற்றப்புலனாய்வு பிரிவின் 6 குழுக்கள் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. விரைவில் அவரை கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது.

சட்டம் அனைவருக்கும் சமமானது. அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவது மாத்திரமின்றி அவருக்கு தஞ்சமளித்தவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். செவ்வந்தியைத் தேடும் போது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்றே தேசபந்து விவவகாரத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.