மலையக மக்களுக்கான அரசின் திட்டங்களை செயற்படுத்துங்கள் எம்மைக் குறைகூறுவதால் பயனில்லை

105 0

எமது காலத்தில் மலையக மக்களுக்கு எங்களால் முடிந்த சேவையை செய்திருக்கிறோம். அதனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் மலையக மக்களுக்கு நீங்கள் தெரிவித்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் மக்களின் வாக்கு கிடைக்காமல் போகுமென ப. திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு  வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

எங்களுக்கு அதிகாரம் கிடைத்த சந்தர்ப்பங்களில் மலையக மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளை நாங்கள் செய்திருக்கிறோம். அதனால் தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் மலையக மக்களுக்கு நீங்கள் தெரிவித்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

நல்லாட்சி காலமே மலையக மக்களுக்கு பொன்னான காலம். மலையக மக்களின் பிரச்சினை 200 வருட பிரச்சினை, அதனை ஓரிரு இரவில் மாற்ற முடியாது.ஒரு ஆட்சிக்காலத்தில் மாற்றவும் முடியாது. அதற்கு தொடர்ச்சியான வேலைத்திட்ம் அவசியமாகும்.

அதனால் மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்கள் பூரண ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்திய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் 2016 இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து 4ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 59 கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதேநேரம் இந்திய அரசாங்கத்தின் 10ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு செய்துள்ள நிலையில் 200 கிராமங்கள் அமைக்க வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.

என்றாலும் அதன் பிறகு எமது ஆட்சி மாற்றப்பட்டது. எமது ஆட்சிக்காலத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்டன. அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன, தோட்ட மக்களுக்கு சேவை செய்யும் வகையில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தோட்டத்தில் பிறந்த நானே முதலாவது அமைச்சரவை அமைச்சராக இருந்தேன். எமது மக்களுக்கு உண்மையாக பணியாற்றி வந்தேன். எதனையும் திருடவில்லை. அன்று நான் வகித்த அமைச்சில் ஏதாவது மோசடி இடம்பெற்றிருந்தால் தெரிவிக்கவும் நாங்கள் மிகவும் தூய்மையான அரசியலே செய்து வந்தோம். தோட்டத்தில் பிறந்த எனக்கு தோட்ட மக்களின் கவலை எனக்கு தெரியும்.

அதனால் யாரும் வாயால் வடை சுட முடியாது. எங்களை குறை கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு தற்போது அதிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதனால் தோட்ட மக்களுக்கு சேவை செய்யுங்கள். தோட்ட மக்களுக்கு வழங்கிய 7பேர்ச் காணியில் நானே முதலாவதாக வீடுகளை கட்டிக்கொடுத்தேன்.

அத்துடன் அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலை, மதுபானசாலை என பல்வேறு பெயர் பட்டியல்களை வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த பட்டியல் எதிலும் எனது பெயரோ மனோகணேசன், இராதாகிருஷ்ணன் போன்றவர்களின் பெயரோ இல்லை. அதனால் நாங்கள் அனைவரும் தூய்மையான அரசியலையே மேற்கொண்டு வருகிறோம்.

மலையகத்தின் வீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கிய பணத்தில்  இந்திய அரசாங்கம் 4500 மில்லியன் வழங்கி இருக்கிறது. எஞ்சிய 2800 மில்லியனே அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. 2800 மில்லியன் ரூபாவில் வேலை செய்ய முடியாது. எமது காலத்திலும் அதுவே இடம்பெற்றது. அதனால் எங்களை குறை கூறி பயனில்லை.

ஒதுக்கும் பணத்திலே வேலை செய்ய முடியும். அரச தரப்பில் 3பேர் இருக்கின்றனர். அவர்கள் எந்தவேளையும் எங்களை கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் மலையத்தில் நாங்கள் அமைத்த வீதியிலே அவர்கள் பயணிக்கின்றனர். அதனால் கூறிக்கொண்டிருக்காமல் மலையகத்துக்கு சேவை செய்யுங்கள் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்றார்.