வெலிவேரிய துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த இளைஞன் “கெஹெல்பத்தர பத்மே”வுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவரா?

101 0
கம்பஹா, வெலிவேரிய, அரலியகஹா சந்தி பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற துப்பாக்கச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெலிவேரிய, அரலியகஹா சந்தி பகுதிக்கு நேற்றைய தினம் இரவு 09.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் காரில் பயணித்த இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான  “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த இளைஞனுக்க எதிராக எவ்வித குற்றச் செயல்களும் பொலிஸ் நிலையத்தில் பதிவாகி இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட கார் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ள நிலையில், குறித்த காரின் உரிமையாளர் சுற்றுலாப் பயணி ஒருவரை காலி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வெலிவேரிய பகுதிக்கு வருமாறு இளைஞனிடம் கூறியுள்ளார்.

பின்னர் இந்த இளைஞன் வெலிவேரிய பகுதிக்குச் சென்றிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.