சர்வதேச ரீதியாகவும் நாடு தழுவிய ரீதியிலும் மகளிர் தினம் தொடர்பான செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நாட்களில் ஒரு பெண் வைத்தியர் பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட செய்தி வெளிவந்திருப்பது இலங்கை தேசத்துக்கு அவமானத்தை தருகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று (14) வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலம் காலமாக இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. அரசுக்கு எதிரான நியாமான புரட்சிகளின் போதும் இன விடுதலைப் போராட்டத்தின் போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பாலியல் துஷ்பிரயோகம் என்பது இனமுறுகலில் ஆதிக்கத்தனத்தை வெளிக்காட்டும் அங்கீகரிக்கப்பட்ட கருவியாக பயன்பட்டது. அதனால் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவற்றுள் வெளிவந்த கதைகளை விட சமூக கலாசார இரும்புக் கதவுகளைத் தாண்டி வெளிவராத செய்திகள் ஏராளம்.
இன்றும் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது.
இச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவர் அல்லது முன்னாள் இராணுவ வீரர் என அறியக்கிடைக்கின்றது. அவரது பின்புலம் இலங்கை இராணுவத்தினர் பெண்களை கையாண்ட பல பாதகமான முன்னைய சம்பவங்களையும் தற்போது ஞாபகப்படுத்தி வருகின்றது.
போர் நடைபெற்றபோது போரின் ஓர் ஆயுதமாக பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதுடன் அது தொடர்பில் அலட்சியமும் செய்யப்பட்டது. அந்த அலட்சியம் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்து அச்சமற்ற சூழலை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விதைத்திருக்கின்றது.
இவ் விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சனல் 4 உள்ளிட்ட தரப்புக்கள் வலுவாக சுட்டிக்காட்டிய போதும் அது குறித்து கருத்தில் எடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாகவே அநுராதபுர சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் தொழில்படையில் அதிக சதவீதத்தினர் பெண்கள். அவர்கள் தொழில் சார்ந்து உள்ளக குடிபெயர்வுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றபோது அவர்களது பாதுகாப்பு குறித்து அதிக கரிசனை கொள்ளவேண்டும். அது போன்று போர் நடைபெற்றபோது எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்படாத தொழில் நெறிமுறையினால் இராணுவத்தை விட்டு விலகியவர்களால் நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன. இவை குறித்து உடனடியாக கவனம் எடுக்க வேண்டும். இது பல்வேறு பாதகமான சூழ்நிலைகளை முற்கூட்டி தவிர்க்க வாய்ப்பளிக்கும்.
அநுராதபுர சம்பவம் ஆட்சியாளர்களுக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் அவர்கள் முன்னுள்ள அவசரமான பணியை ஞாபகப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் ஆத்மார்த்தமாக நமது சங்கம் துணை நிற்கின்றது. சட்டம் மற்றும் நீதித்துறையினர் இச் சம்பவம் தொடர்பில் மட்டுமன்றி இது போன்ற முன்னைய சம்பவங்கள் தொடர்பிலும் அதிக கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். சட்டங்களை புதிதாக உருவாக்குவதற்கு அப்பால் இருக்கின்ற சட்டங்களை முறையாக அமுல்படுத்துவது குறித்து பலமான பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். நாட்டை முன்னேற்றுவதற்கு மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய மனநிலையை உருவாக்குவதே முதல் படியாகும். இந்த விடயத்தை உரிய தரப்புக்கள் கவனம் எடுக்கும் என நம்புகின்றோம் என்றுள்ளது.


