வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என அடையாளம்

116 0

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய  பெண் வைத்தியர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக  இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற  அமர்வில்  உரையாற்றிய  எதிர்க்கட்சித் தலைவர்  அனுராதபுரம் வைத்தியசாலையில்  சேவையில் இருந்த பெண்  வைத்தியர்   நேற்று முன்தினம்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை  என்னவென்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையில்  அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசபந்து தென்னகோன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  கிடைக்கப்பெற்ற  நம்பதகுந்த தகவல்களுக்கு அமைவாகவே மாத்தறை பகுதியில் வீடொன்று சோதனை செய்யப்பட்டது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று தமது அடையாள அட்டையை காண்பித்து, தான் வருகை  தந்தமைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர். வீட்டை சோதனயிடுவதற்கு வீட்டில்  இருந்தவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

முன்னெடுக்கப்படும்  சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பத் தகுந்த  தகவல்களுக்கு அமைவாகவே  நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிடைக்கப்பெறும் தகவல்களை அலட்சியப்படுத்த முடியாது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் எடுத்துரைத்தார்.இச்சம்பவம்  கவலைக்குரியது.

குற்றவாளியை கைது செய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் பிரிவுகள் ஊடாக  பரிசோதனைகள் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவத்தில் இருந்து   தப்பிச்சென்ற நபர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார். விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.