ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது குறித்து தற்போது ஏதும் குறிப்பிடப்படவில்லை. பிள்ளைகளின் இளம்பராயத்தை அனுபவிப்பதற்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் தடையாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச பல்கலைக்கழகங்களில் நவீன போட்டித்தன்மையான தொழில் துறைக்கு சாதகமான வகையில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுத்த வேண்டும்.
முன்பிள்ளை பாலர் பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நாட்டில் அதிகளவிலான முன்பிள்ளை பாலர் பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன.
இந்த பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வி தகைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே பாலர் பாடசாலை தொடர்பில் உரிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இந்த புலமைபரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டுள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகுகிறார்கள்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது குறித்து தற்போது ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஒருசில தனியார் பாடசாலைகளில் ஒன்று முதல் மூன்றாம் தரம் வரை மாணவர்களுக்கு எவ்வித பரீட்சைகளும் கிடையாது. பொதுவான பாடத்திட்டங்களுடனான பயிற்சிகள் மாத்திரமே வழங்கப்படுகிறது.
பிள்ளைகளின் இளம்பராயத்தை அனுபவிப்பதற்கு புலமை பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் தடையாக காணப்படுகிறது. பல அழுத்தங்களுக்கு மத்தியில் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடையும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைவதில்லை.
ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்து விட்டதன் பின்னர் கல்வி மீதான அக்கறை இல்லாமல் போகிறது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டம் விரிவானதாக காணப்படுகிறது. முழுமையாக பரீட்சைக்கு மாணவர்கள் தயாராகுவதால் அந்த பிள்ளையின் இதர திறமைகள் இல்லாமல் போகும் நிலை காணப்படுகிறது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

