“ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

81 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கனேடிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதி 20 வயதுடைய கனேடிய இளங்கலை மாணவி என தெரியவந்துள்ளது.

இவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து போதைப்பொருள் பொதியுடன் அபுதாபிக்கு வருகை தந்ததுடன், அங்கிருந்து இரவு 08.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 17.5 மில்லியன் ரூபாய் மதிப்புடைய  17 கிலோ 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்  போதைப்பொருளுடன்  மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.