இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthran ) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று (08) மாலை கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.
ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.