இன்று சர்வதேச மகளிர் தினம்!

196 0

மார்ச் – 8 சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் உழைக்கும் மகளிரின் உரிமைக்காக கொண்டாடப்படுகிறது.

“ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்வி அறிவு பெறுவதற்கு சமம்” என்றார் நேரு. பெண் என்பவள் தாய்க்குலத்தின் வற்றாத அன்பையும்,அயராத உழைப்பையும் குடும்பத்திற்காக வழங்குபவள் ஆவாள். எனவே தான் சமூகத்தின் நிலையில் பெண் என்பவள் “தரை தொட்ட காலம் முதல் நடை கொண்ட காலம் வரை அங்கம் வகித்து வருகிறாள். தியாகத்தையே தொழிலாக கொண்டு அர்ப்பணிப்பை வாழ்வாக்கி உலகுக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்து வருவது அவளது பெண்மையின் திறமையே ஆகும்.

பெண்கள் தங்களது திறமையால் முன்னேறும்போது பலவிதமான கசப்பான அனுபவங்களைச் சந்திக்கின்றனர். தங்களால் சாதிக்கமுடியாததை பெண்கள் சாதிப்பதைப் பார்த்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒருசிலர் கேலி செய்வார்கள்.

மானுட நாகரிகத்தின் உச்சத்தை அடைந்துவிட்டோம் என அறைகூவல் விடுக்கும் இந்நூற்றாண்டில்தான் பெண்கள் இன்னும் புற அழகினைச் சார்ந்தே முன்னிறுத்தப்படுகிறார்கள். திறமைகளை மீறி அழகு மட்டுமே தகுதியாக பார்க்கப்படுவது இன்றைய கணினி நிறுவனங்கள் முதல் கல்விக்கூடங்கள் வரை நிதர்சன உண்மை. இத்தடைகளை எல்லாம் மீறியே சாதாரண பெண்ணின் திறன் வெளிவர வேண்டி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின்  துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர்.

நிர்வாகம் , படைத்துறையில் மட்டுமல்ல பெண் விடுதலைப் புலிகள் இலக்கியப் படைப்புகளிலும் சிறந்தவர்களாக விளங்கினர்.

போர்க் காலங்களில் இயற்றப்படும் ‘போர் கவிதைகள்’ என்னும் இலக்கிய வகைமையை பெண் விடுதலைப் புலிகள் திறமையுடன் கையாண்டனர். அவர்களின் படைப்புகளை வெளியிட ‘மகளிர் பிரிவு வெளியீட்டகம்’ என்னும் பிரிவின் கீழ் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர்.

பெண் விடுதலை, இன விடுதலை, சமூகநீதி, மூடத்தன ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றக் கருத்தாக்கங்கள் இவர்களின் படைப்புகளில் விரவியிருந்தன.

“பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி ”என்றார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் . தலைவர் அவர்களின் சொற்படி விடுதலைப் படிநிலைகளில் ஏறி நீடித்து நிற்கும் சாதனைகள் பல புரிந்து வீரத்திற்கும் சுயமரியாதைக்கும் பெண்ணினத்திற்கு முன்னுதாரணமாக நடையிட்டனர் விடுதலைப்புலிகள் மகளிர். அணி.

“பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

விடுதலைப் புலிகளால் விதைக்கப்பட்ட அடித்தளத்தை வழிகாட்டியாக கொண்டு நாம் பெண்களின் விடுதலை நோக்கிய பாதையிலே தொடர வேண்டும்.