முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோன்பு நோற்கும் மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்ய போகின்றனர்? அவர்கள் பதில் வழங்குவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. விசேட வியாபார பண்ட அறவீடு மூலம் பேரீச்சம்பழத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், உருளைக் கிழங்கு இறக்குமதி உணவு வகையில் அதிகரிப்பதன் ஊடாக பயிர்செய்கையாளர்கள் இலாபம் பெறுவார்கள் என
கூறமுடியும். எனினும் பேரீச்சம்பழ வரி அதிகரிக்கப்படுகின்றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயிரிடப்படுகின்றதா? பேரீச்சம்பழ பயிர்செய்கையாளர்கள் இலங்கையில் உள்ளனரா? இல்லை; நோன்பாளிகளை வைத்து அரசாங்கம் தனக்கு இலாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. இது பெரும் அநியாயமாகும்.
எனவே இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றனர்? பெரிதாக தம்மை முஸ்லிம் தலைவர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் என்ன பதில் வழங்க போகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

