இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 90 சதவீதம் ஆண்களே முதல்வராக உள்ளதாகவும், பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னையில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எம்.பி.யும், உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ‘பெண்கள் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது’ என்ற கையெழுத்து இயக்கத்தையும் கனிமொழி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி தென்மண்டலம் அளவில் நடத்தப்பட்ட கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற உணவுக் கழகத்தின் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மகளிர் தினத்தை எதற்காக கொண்டாடுகிறோம். இந்த சமூகத்தில் நமக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காகத் தான். இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல பிரிவில் 30 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் 50 சதவீதத்தை தொடவில்லை. இருந்தாலும் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடுகையில் இது சிறந்த எண்ணிக்கையாக தெரிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் விட இந்திய உணவுக் கழகம் இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த உலகம் வழங்கும் அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள பெண்களுக்கும் உரிமை உண்டு. பெண்களுக்கு, அவர்களுக்கான இடம் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நாட்டில் 90 சதவீதம் ஆண்கள் தான் முதல்வராக உள்ளனர். ஏன் பிரதமர் கூட ஆண் தான். ஆனால் டெல்லியில் ஒரு பெண் முதல்வராக பொறுப்பேற்றபோது, நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலர் சொன்னது, அவர் பெண் என்பதால் முதல்வராக்கப்பட்டுள்ளார் என்று.
ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும்போது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. இந்த கேள்விகள் பல பெண்களை தான் யார்? அந்த பதவிக்கு தான் தகுதியுடையவரா? போன்ற சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த மனத்தடையை உடைத்து பெண்கள் சமூகத்தை எதிர்கொள்ள தயாராகும் போது தான், சமூகம் பெண்கள் சொல்வதை கவனிக்கத் தொடங்கும். பெரியாரை விட, பெண்களின் உரிமையை தைரியமாக, வெளிப்படையாக பேசிய தலைவர்களை இன்றுவரை நம்மால் பார்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் இந்திய உணவுக் கழகத்தின் மாநில பொது மேலாளர் பி.முத்துராமன், அர்ஜுனா விருது பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனையும், இந்திய உணவுக்கழக பொது மேலாளருமான ஷைனி வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

