தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் சுகாதாரத்துறை அமைச்சினை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பொறுப்பேற்றுள்ளார். பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், குடியிறுப்புக்கள் மற்றும் மலசலகூட வசதிகள், குடிநீர் வசதி தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்’.
நுவரெலியா, மஸ்கெலியா, ஹட்டன், கொட்டகலை, மன்ராசி, லிந்துலை, வலப்பனை, ரிக்லஸ்கட, உடப்புசல்லாவ ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முழுமையாக அபிவிருத்தியடையாத நிலையில் பல குறைப்பாடுகளுடன் இயங்குகின்றன. இந்த வைத்தியசாலைகள் ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டன.
ஹட்டன் டிக்கோயா நகரில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வைத்தியசாலையை திறந்து வைத்தார். இந்த வைத்தியசாலையிலும் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது
சிவனொளிபாத மலைக்கு பொதுமக்கள் மஸ்கெலியா வீதி ஊடாகவே செல்கிறார்கள். ஆகவே மஸ்கெலியா வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். நுவரெலியா பொது வைத்தியசாலை சிறந்த முறையில் உள்ளது. அங்கு நிலவும் ஒருசில குறைபாடுகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வு காண வேண்டும்.
பெருந்தோட்ட பகுதிகளில் 502 மருந்தகங்கள் காணப்படுகின்றன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
பெருந்தோட்ட பகுதிகளில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் மத்தியில் போசாக்கின்மை 27 சதவீதமாகவும், 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் மத்தியிலான போசாக்கின்மை 10.2 சதவீதமாகவும் காணப்படுகிறது. பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 1148 ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்ற நிலையில் தற்போது 194 ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்களுக்கு மாத்திரமே சத்துணவு வழங்கப்படுகிறது.
பெருந்தோட்ட பகுதிகளில் மலசலகூட வசதி பற்றாக்குறை காணப்படுகிறது. 4500 மலசலகூட வசதிக்கான தேவை காணப்படுகிறது. அதேபோல் 30 ஆயிரம் பேர் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

