118ஆவது வடக்கின் சமர் : யாழ். மத்திய அணி 131, சென். ஜோன்ஸ் 104 – 3 விக். அஷ்னாத் 5 விக்கெட் குவியல்

90 0

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய  அணிக்கும்  இடையிலான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மத்திய அணியை 131 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய  சென். ஜோன்ஸ்  முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது.

 

சென். ஜோன்ஸ் வீரர் அஷ்னாத் சகலதுறைகளிலும் பிரகாசித்து அணியை நல்ல நிலையில் இட்டுள்ளார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். மத்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் அன்ரன்ரேஷான் அபிஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரருமான ரஞ்சித்குமார் நியூட்டன், சதாகரன் சிமில்டன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

சென். ஜோன்ஸ்  பந்துவீச்சில் 6ஆம் வருட வர்ண வீரர் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18.2 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முர்வின் ரெண்டியோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் யாழ். மத்திய அணியை விட 27 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் பின்னிலையில் இருக்கிறது.

சென். ஜோன்ஸ் அணியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது அதன் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன் மற்றைய ஆரம்ப வீரர் சற்குணராஜா வினுக்ஷன் 2 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக ஓய்வுபெற்றார்.

இந் நிலையில் ராமன் அனுஷாந்த், முர்பின் ரெண்டியோ ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

முர்பின் ரெண்டியோ 20 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த வினுக்ஷன் சொற்ப நேரத்தில் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ராமன் அனுஷாந்த் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 29 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4 ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.