தரம்குறைந்த மருந்துகள் விநியோகம் ; மனித வர்க்கத்துக்கு எதிரான குற்றம்

94 0

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு சீர்செய்யப்பட்டு, அங்குவரும் நோயாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டி இருக்கிறது. அதேநேரம் நோயாளர்கள் அங்கு நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துமென பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுக்கும் வரும் நாேயாளர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அவர்களில் அதிகமானவர்கள் நாட்கூலி செய்து வாழ்க்கையை கொண்டு செல்கின்றவர்கள்.

அதேநேரம் நீண்நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவதால் அவர்களில் அதிகமானவர்கள் தங்களின் சிறிய பிள்ளைகளை வீடுகளில் தங்கவைத்து வருகின்றனர். அதனால் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மக்கள் அரசாங்க வைத்தியசாலைகளை நம்பி வருகின்றனர். என்றாலும் கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகளில் தரம் குறைந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இது மனித வர்க்கத்துக்கு எதிரான குற்றமாகும். மன்னிக்க முடியாததாகும்.

என்றாலும் இடம்பெற்ற விடயங்களை மறந்துவிட்டு எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

அதேநேரம் மூலைசாலிகளின் வெளியேற்றம் நாட்டில் சிறந்த ஆராேக்கியமான மருத்துவ சேவையை வழங்குவதற்கு தடையாக அமைந்திருக்கிறது.நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாலும் பொருளாதார நெருக்கடி நிலைமையினாலுமே மூலைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேற காரணமாக இருந்தது.  மக்கள் தாய்நாடு தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர்.

அவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தே நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனை கட்டுப்படு்த வேண்டி இருக்கிறது. அவர்கள் உடல் ரீதியாக வெளியேறினாலும் அவர்களின் உள்ளம் இலங்கையிலேயே இருக்கிறது.

போதைபொருள் பாவனை நாட்டில் அதிகரித்துள்ளது. இது சுகாதாரத்துறைக்கு மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்த பிரதான காரணமாக அமைகிறது. குறிப்பாக நகர்புற மக்கள் இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது எமது குடுபம், சமூகத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் மத்தியிலும் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சுகாதாரத்துறைக்கு அரசாங்கம் போதுமான நிதியை ஒதுக்கி இருக்கிறது. குறிப்பாக கர்ப்பினி தாய்மார்களின் சுகாதாரத்துக்காக 7,4 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் திரிபோஷா வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதேநேரம் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றனர். குறிப்பாக தாதியர்களில் அதிகமானவர்கள் பெண்களே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகள் நோய்வாய்ப்பற்று இருந்தாலும் வீடுகளில் தங்கவைத்து சேவைக்கு வருகிறார்கள்.

எனவே நாட்டின் சுகாதாரத்துறையை முன்னேற்ற நிலைக்கு கொண்டுவர நாங்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும். அரசாங்கமூம் இந்த வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறையினருக்கு சம்பளம் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்றார்.