மட்டக்களப்பு சீனோர் வீடமைப்புத் திட்டத்தில் வாழும் குடியேற்றவாசிகளுக்கு வீட்டு உரிமம் பத்திரம் வழங்குவது தொடர்பில் வீடமைப்பு அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழு ஒன்றை நியமிக்க வேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.
சீனோர் வீட்டுத் திட்ட விவகாரத்தில் எம்மால் தலையிட முடியாது. குழு அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச சபை தலையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அநுர கருணாதிலக,
1982 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி -2 பிரதேசத்தில் சீனோர் வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீடமைப்பு திட்டம் தனியார் காணியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிப்பவர்களுக்கு காணி உறுதிபத்திரத்தை எமது அமைச்சின் ஊடாக வழங்க முடியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சாக்கியன் இராசமாணிக்கம், இந்த வீட்டுத்திட்டம் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 43 ஆண்கள் பிரச்சினைகள் தொடர்கிறது.
சீனோர் வீட்டுத் திட்டம் களுவன்கேணி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு, அங்கு பலர் குடியேறினார்கள். இந்த மக்கள் பல ஆண்டுகளாக வீட்டு உரிமம் பத்திரம் இல்லாமல் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பலமுறை பேசியுள்ளோம்.இருப்பினும் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏதும் கிடைக்கவில்லை.
பிம்சவிய செயற்திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் உறுமய (உரித்து) செயற்திட்டத்தின் ஊடாக காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
சீனோர் வீட்டுத்திட்டம் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது குறிப்பிட முடியாது. 1982 ஆம் ஆண்டு தனியார் காணியா, அரச காணியா என்பதை பொறுப்பில் இருந்தவர்கள் ஆராய்ந்திருக்க வேண்டும்.
ஆகவே வீடமைப்பு அமைச்சு ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு குழுவை அமைத்து ஒரு தீர்வினை ஏன் பெற முடியாது என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், இந்த திட்டத்துக்கு வீடமைப்பு அமைச்சு தொழில்நுட்ப உதவிகளை மாத்திரமே வழங்கியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு ஊடாகவே இதர பணிகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எமது அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய இவ்விடயத்தில் எம்மால் தலையிட முடியாது.
குழு ஒன்றை அமைக்க வேண்டுமாயின் குறித்த மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரின் தலையீட்டின் ஊடாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய சாணக்கியன் இராமாணிக்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதை போன்று பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
காணி தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு எல்லைக்குள் பலர் காணிக்கு உறுதி பத்திரம் இல்லாமல் இருக்கிறார்கள். வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கும் உரித்து இல்லை.
வீடமைப்பு அமைச்சு ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மட்டக்களப்பு மாநகர சபைக்குள்ளான காணிகளுக்கு உரித்து பத்திரம் வழங்குவதிலும் இழுபறி நிலை காணப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் 8 ஏக்கர் காணியை கைப்பற்றியுள்ளார்.அதற்கு உரித்து பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்திடம் இடம்பெற்ற தவறுகளை தட்டிக் கேட்பீர்கள் என்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். இவ்விடயத்தில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா, முடியாதா என்பதை குறிப்பிடுங்கள், முடியாவிடின் குறிப்பிடுங்கள் நாங்கள் அடுத்த அரசாங்கத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

