மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவரை தாக்கிய பல்கலை மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை

88 0

மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை கைது செய்வது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மிஹிந்தலை நகரிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை (01) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேலும் சில மாணவர்கள் மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் . மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.