இந்திய உயர் ஸ்தானிகர் , இளைஞர் விவகார அமைச்சருக்கிடையில் சந்திப்பு

80 0

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாட்டுக்கான இலங்கையின் பத்து பேர் கொண்ட குழுவை வழிநடத்திய இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (27) இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த உச்சி மாநாட்டை இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இம்மாதம் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் நடத்தியது.

பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய இளைஞர் அதிகாரமளிப்பு முயற்சிகளை முன்வைத்தனர். இதில் வீ.4.ஆர். திட்டம், இளைஞர்களுக்கான மல்டி-மோடல் மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திட்டங்கள் மற்றும் தொழிற்கல்வி திட்டங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவை அடங்கும்.

இம்மாநாட்டின் தொடக்கத்தில், இந்தியாவின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவை சந்தித்தார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்முனைவோர், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.