அரச ஊழியர்களின் சம்பளத்தை உணரக்கூடியவகையில் அதிகரிப்பதாக தெரிவித்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளையும் இணைத்தே 15750 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும்போது அரசாங்கத்தின் நிலை அரச ஊழியர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிகிழமை (25) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
76 வருட அரச கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறியுள்ளனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எிதரான நிலைப்பாட்டியேலே இருந்தனர்.
ஆனால் இன்று தனியார்பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என தெரிவிக்கின்றனர்.நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என தெரிவித்தார்கள். ஆனால் தற்போது இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை அவ்வாறே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மக்களுக்கு பாதிப்பான அனைத்து நிபந்தனைகளையும் மாற்றியமைப்பதாக தெரிவித்தார்கள்.
ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதங்கள் கடந்தும் நாணய நிதியத்தின் எந்த நிபந்தனையையும் மாற்றாமல் அவ்வாறே முன்னெடுத்துச் செல்கிறது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாற்றமாக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அதனால் இந்த வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். மேலும் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கும்போது அது அவர்களுக்கு உணரக்கூடியவகையில் அதிகரிப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.
25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பதாக கடந்த அரசாங்கம் தெரிவித்தபோது, அது போதாது 6மாதத்துக்கு ஒரு தடவை சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பாக 15750 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் கடந்த அரசாங்கம் வழங்கய 7500 ரூபா கொடுப்பனவையும் இணைத்துள்ளது. அதனை இணைக்காவிட்டால் அரசாங்கம் 3வருடங்களுக்கு 80250வே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 5950ரூபா அதிகரிக்கப்படுகிறது.
அதிலும் 5ஆயிரம் ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கினார். அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு கிடைக்கிறது. அதனால் ஏப்ரல் மாதம் அரச ஊழியர்கள் சம்பளம் பெறும்போது அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பை உணர்ந்துகொள்வார்கள் என்றார்.

