அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவி்த்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய மக்களாக இருப்பது பெருந்தோட்ட மக்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். ஆனால் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7322 மில்லியன் ரூபாவை ஒதுக்கிவிட்டு அதனை பெருமையாக பேசி வருகின்றனர்.
அதில் 3500 மில்லியன் ரூபா வீட்டு திட்டத்துக்காக ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கின்றபோதும் அது இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும்.
அதேபோன்று ஸ்மாட் வகுப்பறைக்கு 600 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாலும் அதுவும் இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதுதவிர தோட்ட உட்கட்டமைப்புக்காக அரசாங்கம் 1800 மில்லியன் ஒதுக்கிி இருக்கிறது.புதிய கிராம வேலைத்திட்டத்துக்கு என 50 இலட்சம் ரூபா ஒதுக்கி இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும்.
அதாவது நூற்றுக்கு 56வீதம் இந்திய அரசாங்கத்தின் நிதியாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும்.
அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தைச்சேர்ந்தவர்களும் அலையகம் அல்லாத தமிழ் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மலையகத்தின் அரசியல்வாதிகளை குறைசொல்லி வருகின்றனர். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம்.
நுவரெலியா மாவட்டத்தில் 6 புதிய பிரதேச சபைகளை உருவாக்கி இருக்கிறோம். புதிய பிரதேச செயலகத்தை நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம். அதேபோன்று தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணி பெற்றுக்கொடுக்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொண்டு
அதனை நாங்களே ஆரம்பமாக பெற்றுக்கொடுத்தோம். கடந்த அரசாங்க காலத்தில் அது 10பேர்ச்சாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த காணிகளில் நாங்க் தனி வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு தனி வீடுகளை கட்டி மலையக தமிழ் கிராமமாக பிரகடனப்படுத்த இருந்தோம். மலையக அபிவித்திக்காக தனியான அதிகாரசபையை உருவாக்கி இருக்கிறோம்.
ஆனால் அந்த அதிகாரசபைக்கு 500 இலட்சம் ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி, மலையக மக்கள் தேசிய இனம் என்பதை சர்வதேச ரீதியில் நாங்கள் பிரகடனம் செய்திருக்கிறோம். குடிசன புள்ளிவிபர மதிப்பீட்டிலும் மலைய மக்களின் புள்ளிவிபரங்களை பதிவு செய்யும்போது இந்திய தமிழ் மக்கள் என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனை மாற்றியமைத்து மலையக தமிழர் என கொண்டுவந்திருக்கிறோம். நாங்களே அதனை செய்தோம். அரசாங்கம் அதனை முன்னெடுத்திருப்பதையிட்டு சந்தோஷப்படுகிறோம்.
மேலும் பெருந்தாேட்ட மக்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது இடம்பெறப்போவதில்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் தோட்டங்களில் முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மலையக மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என நாங்கள் கேட்பதில்லை.
மாறாக அவர்களுக்கு நாங்கள் 7பேர் காணி கொடுத்தோம். அதேபோன்று அரசாங்கம் காணி கொடுக்கப்போகிறதா அல்லது வீடு கட்டிக்கொடுக்கப்போகிறா? அது தனி வீடா, மாடி வீடா என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதனை தெரிவிக்காமல் 33 வருடங்களுக்கு முன்னர் மரணித்த ரணசிங்க பிரேமதாச மலையகத்துக்கு வீடு கட்டிக்கொடுக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிப்பது குறித்து வெட்கப்படுகிறேன். அரசாங்கம் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் மலையக மக்களின் வீட்டுக்கொள்கை அல்லது காணிக் கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

