நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள அண்மைய பொலிஸ்காவலின் கீழான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இச்சம்பவங்கள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் அண்மையில் பதிவான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர பி.மெத்தேகொட மற்றும் செயலாளர் சத்துர ஏ.கல்ஹென ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 19 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்குள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலின் கீழிருந்த சந்தேகநபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு பொலிஸ்காவலின் கீழிருந்த 2 சந்தேநபர்கள் தப்பிக்க முற்பட்டதாகக்கூறி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அன்றைய தினம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள இத்தொடர் சம்பவங்கள் குறித்து நாம் தீவிர கரிசனையடைகின்றோம். சட்டக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கக்கூடிய இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சட்ட அமுலாக்கப்பிரிவினர் பெரும் அவதானத்துடனும், மிகுந்த பொறுப்புடனும் செயற்படவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை கடந்த காலங்களிலும் இதுபோன்ற பொலிஸ்காவலின் கீழான கொலைகள் இடம்பெற்றதுடன், அவை தொடர்பில் முறையான விசாரணைகளோ அல்லது குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்விடயத்தில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவாக, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மேலோங்கியிருப்பதாக அரசின்மீது குற்றஞ்சுமத்தும் நிலை தோற்றம்பெற்றுள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய தோல்வி நாட்டின் நீதி நிர்வாகம் கேள்விக்கு உட்படுத்தப்படுவதற்கும், அதன் செயற்திறன் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் வழிகோலியுள்ளது.
நீதிக்குப் புறம்பான சட்டவிரோத படுகொலைகள் ஒருபோதும் அதிகரித்துவரும் குற்றச்செயல்களுக்கான தீர்வாக அமையாது. மாறாக அரசு சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாக இயங்குவதன் ஊடாகவே குற்றங்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட இரண்டாவது சம்பவத்தில் பொலிஸ்காவலின் கீழிருந்த இரண்டு சந்தேநபர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பதில் பொலிஸ்மா அதிபரை வலியுறுத்துவதுடன், இத்தகைய மிகப்பாரதூரமான பொலிஸ்காவலின் கீழான கொலைச்சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் பொலிஸ்காவலின் கீழான கொலைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவருவதற்கு, அச்சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அது சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கும், நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும்.
அதன்படி இச்சம்பவம் தொடர்பான விசாரணை செயன்முறைகளை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்கவிருப்பதுடன், நாட்டின் சட்ட அமுலாக்க செயன்முறையின் ஊடாக பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

