இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். இவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் மாத்திரமே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏதும் குறிப்பிடப்படவில்லை.தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றியதை போன்று வரவு செலவுத் திட்டத்திலும் மக்களை தேசிய மக்கள் சக்தி ஏமாற்றியுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது மலினப்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடுவீதியில் மனித படுகொலைகள் இடம்பெறுகிறது.இலங்கையில் முதன்முறையாக நீதிமன்றத்துக்குள் நீதிபதி முன்னிலையில் குற்றவாளி கூண்டில் உள்ள சந்தேக நபர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கடந்த காலங்களை பற்றியும், தேசிய பாதுகாப்பு பற்றியும் மார்பு தட்டி பேசுவார்கள். தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது.இவ்விருவரும் பதவி விலக வேண்டும்.
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே உள்ளார்கள். எந்த பிரச்சினைகளுக்கும் இவர்களால் தீர்வு முன்வைக்க முடியாது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்துக்கு சவால்மிக்கதாக அமையும் என்றார்.

