மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது !

136 0

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லொலுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை கடந்த 7ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 33 வயது மதிக்கதக்க  யாகொடமுல்ல மற்றும் தாகொன்ன பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த கைது நடவடிக்கையின்போது 17 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கையடக்கத் தொலைப்பேசிகளும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

அத்தோடு,  துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர்களுக்கு  தப்பிச் செல்ல உதவியமை, தங்குமிடம் வழங்கியமை  மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு போலி எண் தகடுகளைப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.