புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தெரிந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதனை தமது பாராளுமன்ற காலப்பகுதிக்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தமை அறிந்ததே.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய அரசியலமைப்பு தீர்வு தொடர்பான கடந்தகால நிலைப்பாடுகளானவை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பதற்கான நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை என்பதே உண்மை.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிர்ணய சபை மூலமாகவோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வடிவத்திலோ புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படக்கூடிய நிலையில் புதிய அரசியலமைப்பாக்கல் முயற்சியை எவ்வாறு தமிழ்த் தேசமாக எதிர்கொள்வது என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.
அரசாங்கம் அரசியலமைப்பாக்க முயற்சியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இவ்விடயத்தில் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியமானதாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கணிசமான அளவில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் வாக்களித்திருந்தார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
முதல் முறையாக தமிழ் தேசிய கட்சி அல்லாத ஒரு கட்சியானது வடக்கு, கிழக்கிலே குறிப்பிடத்தக்க அளவு ஆசனங்களை பெற்றிருந்தது வரலாற்றில் முதல் தடவையாக அமைந்திருந்ததையும் பல்வேறு தரப்பினர் கரிசனையுடன் அவதானித்துள்ளனர்.
அதேவேளை பொதுத்தேர்தலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முடிவுகளானவை தமிழ்த் தேசிய கருத்தியலை மக்கள் மறுதலிக்கவில்லை என்பதனை எடுத்தியம்புவதோடு மாறாக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் மீது அவர்களுக்குள்ள சலிப்பே கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கான வாக்காக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என்பதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
எனவே, தேர்தல் கால கூட்டுக்களுக்கு அப்பால் தமிழர் தேசம் முகங்கொடுக்கக்கூடிய சவால்களுள் ஒன்றாக தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து இயங்குவது என்பது முக்கியமானது. அந்த வகையில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளானவை பாராளுமன்றத்தினூடாக முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பாக்கல் முயற்சி தொடர்பாக கருத்தொருமிக்க ஒருமைப்பாட்டை அடைய வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.
இத்தகைய ஒரு நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் தமிழ் அரசுக் கட்சியின் பாரளுமன்ற குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்களும் எடுத்துக்கொண்டுள்ள அண்மைக்கால முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியதும், ஆதரவு வழங்கப்பட வேண்டியதுமான ஒரு முயற்சியாகும். இதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் பொதுவெளியில் கருத்து வெளியிட்டுள்ளமையும் சனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முயற்சியில் பங்கெடுக்கத் தயாராக உள்ளமையும் வரவேற்கப்பட வேண்டியதாகும். இம்முயற்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் இணைந்துகொள்ள வேண்டும் என நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்.
ஏலவே, தமிழ் சிவில் சமூக அமையமும் அங்கம் வகித்து தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்பு யோசனைகளின் அடிப்படையில் குறித்த அரசியலமைப்பாக்கல் முயற்சிக்கான பொதுப்புள்ளியை அடைவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்துள்ள நிலைப்பாடாகும்.
தமிழ் மக்கள் பேரவையில் தமிழ் அரசுக் கட்சி பங்குபற்றாவிட்டாலும் அக்கட்சியினுடைய வரலாற்று ரீதியான நிலைப்பாடுகளில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவுகள் வேறுபட்டவை அல்ல என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் எண்ணமாகும்.
இருப்பினும் இந்த முயற்சியில் தமிழ் அரசுக் கட்சி பங்குபற்றவில்லை என்ற விடயம் முன்வைக்கப்படுவதனால் வெறுமனே தமிழ்மக்கள் பேரவையின் யோசனைகள் மாத்திரமன்றி காலத்துக்கு காலம் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் முன்மொழியப்பட்ட நகல் வரைபுகளை இந்த பொதுப்புள்ளியை அடைவதற்கான செயன்முறையில் உள்ளீடாக பயன்படுத்தலாம் என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடாகும்.
ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பெயர் தாங்கிவரக்கூடிய யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என யோசிக்கக் கூடாது என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் வினயமான வேண்டுகோள் ஆகும்.
தமிழ் மக்களுக்கு அவசியமான தீர்வு என்ன என்பது தொடர்பான ஓர் ஒருமித்த குரலில் தமிழ் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் நிலைப்பாடு எடுத்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே தமிழ் சிவில் சமூக அமையத்தினுடைய வேண்டுகோள் ஆகும்.
ஆனால், இந்தச் செயன்முறையிலே 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையோ அந்தச் செயன்முறையில் நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலோ குறித்த பேச்சுவார்த்தைகள் அமைய முடியாது என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடாகும். தென்னிலங்கை அரசியலமைப்பு சட்டத்தரணிகளும் புலமையாளர்களும் குறித்த 2015 – 2019 செயன்முறையில் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையும் நிபுணர் குழுவால் உருவாக்கப்பட்ட நகல் வரைவும் 13ஆம் திருத்தத்தை விட குறைவான அதிகாரப்பரவலைத்தான் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஏக்கிய இராச்சிய என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளானவை இந்த பொது நிலைப்பாட்டை அடைவதற்கான ஒரு தேடலில் ஓர் ஆவணமாகக் கொள்ளப்படவேண்டிய அவசியமே இல்லை என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடாகும்.
எட்டப்படுகின்ற பொது நிலைப்பாடுகளானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையிலும் தமிழருடைய தேசம், சுயநிர்ணயம், இறைமை மற்றும் வடக்குக் கிழக்கு தாயகமானது அவர்களுடைய ஆளுகைக்கான நிலப்பரப்பு என்ற விடயங்களில் விட்டுக்கொடுக்காத ஒரு பொதுவான நிலைப்பாடாக அமைய வேண்டும் என்பது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடாகும்.
எனவே குறித்த வரையறைகளுக்கு உட்பட்ட எந்த நகல் வரைபையும் குறித்த தேடலில் உள்ளீட்டு ஆவணங்களாக பயன்படுத்திக்கொள்வதில் தடை எதுவும் இருக்க முடியாது. மாறாக இந்த வரையறையை வெளிப்படையாக மீறியும், அதனை ஏற்றுக்கொள்ளாததுமான ஆவணங்களை குறித்த செயன்முறையில் பயன்படுத்துவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திரு. சிறிதரன் அவர்களால் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியினை குழப்புவதற்கு பல்வேறு சக்திகள் முயற்சிக்கின்றன என்பது பொதுவாக நோக்குகின்றபோது அறியக்கூடியதாக உள்ளது.
தமிழ் மக்கள் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்பதிலும் குறிப்பாக அரசியலமைப்பு தீர்வு சார்ந்து தெளிவான தமிழ் தேசத்தின் வரலாற்றில் விட்டுக்கொடுக்காத ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க கடந்த 15 வருடங்களில் தவறிய தரப்புகள் இந்த முயற்சியை குழப்ப மக்களால் தற்போது அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ள போதும் முயற்சிக்கின்றமை எமக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.
இவ்வாறான குழப்பகரமான சக்திகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு ஒருமித்த பொதுவான நிலைப்பாடு ஒன்றை யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் முதல் தடவையாக 15 வருடங்களுக்கு பிறகு எய்துவதற்கான வாய்ப்பை நாம் இழக்காமல் பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் குறித்த முயற்சியானது வெற்றி பெற நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிப்பது அவசியம் என்ற அடிப்படையில் நாம் அனைவரையும் இந்த முயற்சியில் பங்கெடுக்குமாறும் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக இந்த விடயத்தை வெறுமனே அரசியல் கட்சிகளிடம் மட்டும் விட்டுவிடாமல் தமிழ் மக்களும் நேரடி பங்குபற்றுநர்களாக இந்தச் செய்முறையில் இணைந்துகொள்வதானது இந்தச் செயன்முறை மக்களின் நலன் சார்ந்து இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கு உதவும்.
மேலும், குறித்த முயற்சி மேலே சொல்லப்பட்ட வரையறைக்கு அமைய தொடருமிடத்து இம்முயற்சிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது பூரணமான ஒத்துழைப்பையும் உள்ளீட்டையும் பங்களிப்பையும் வழங்கும் என அறியத்தருகிறோம் என்றுள்ளது.

