எம்பிலிப்பிட்டியவில் பொலிஸ் அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி நுழையவில்லை

76 0

இரத்தினபுரி , எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் வீடொன்றின் கதவை உடைத்து அத்துமீறி நுழைவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடங்கள் போலியானது என  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத மதுபானம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிலர் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை நேற்று புதன்கிழமை (05) சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர் வீட்டின் கதவை மூடிக்கொண்டு பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனால் பொலிஸ் அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து, உள்நுழைந்து சந்தே நபரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது, அந்த வீட்டிலிருந்த சந்தேக நபரின் சகோதரன், பொலிஸ் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைவதை காணொளி எடுத்து, தவறான கருத்துக்களுடன் அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சமூக ஊடகங்களில் காணொளியை பகிர்ந்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபரின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்வதற்காகவே வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ளதாகவும், வேறு எந்த காரணங்களும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.