கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை புறநகர் பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரும் பெரிய நீலாவணை பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் 54 மற்றும் 62 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரில் ஒருவர் கைக்கடிகாரம் திருத்தும் பணியிலும் மற்றையவர் பிரபல ஆடையகத்தை நடத்தி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து 7 கிலோ கேரளா கஞ்சா, 4 கிலோ கேரளா கஞ்சா, மோட்டார் சைக்கிள், 5 இலட்சம் 90 ஆயிரம் ரூபாய் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

