புதுக்குடியிருப்பில் 100 ற்கு மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு

146 0

வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அண்மைய நாட்களாக  கால்நடைகள்  இரவு நேரங்களில்  வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் பொலிஸாரின் உதவியுடன்  ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, மந்துவில், சிவநகர், கோம்பாவில், கைவேலி ஆகிய  பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த நடவடிக்கையில் 100க்கும் அதிகமான  மாடுகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு  பிரதேசசபையின் செயலாளர் ச.கிருசாந்தன்  கூறிய போது, 

வெறுமனே எம்மால் மேற்கொள்ளப்படும் இந் நடவடிக்கையினால் மாத்திரம் தீர்வு பெற்றுவிட முடியும் என்பது சாத்தியமற்ற ஒன்று.

கால்நடைகளின் உரிமையாளர்களிற்கு நிச்சயமாக ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும்.

சபைக்கான வருமானமீட்டலினை பிரதானமாக கொண்டு இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

எமக்கான சமூக பொறுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு உப அலுவலக பிரிவில் 100 இற்கு மேற்பட்ட கால்நடைகள் சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிடிபட்ட கால்நடைகளுக்கு, கால்நடை வைத்திய அலுவலகங்களினூடாக அன்றையதினமே காதுப்பட்டி அணிவித்து தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்களிற்கு மட்டுமே குறித்த கால்நடைகள் வழமையாக நடைமுறைகளில் பிரகாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் உப அலுவலக பிரிவில் வீதிகளில் கால்நடைகள் மிக குறைந்த அளவில் காணப்பட்டன அவை அங்கிருந்து சபைக்கு வரும் வழியில் வேலிகள் அற்ற தனியார் காணிகளினூடாக தப்பி சென்றுவிட்டன.

பெரிய மாடு 3000 ரூபாயும், சிறிய மாடு 1000 ரூபாவும், மீளவும் அதே கால்நடைகள் பிடிபடுமிடத்து 5000 ரூபா நாள் ஒன்றுக்கான பராமரிப்பு கூலி 500 ரூபா விகிதம் அறவிடப்படும் என்றார்.