அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதனடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், விசேட வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்திரம் உள்ளிட்ட ஏனைய அனைத்து தேவையான ஆவணங்களையும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45 வீதத்துக்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படமாட்டாது.
ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

