செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு

56 0

செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்களிற்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துப் போராடிய காலத்திலிருந்து, புலம்பெயர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சுக் கிளைச் செயற்பாட்டாளராக இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் 19.01.2025 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

இவர் தாயகத்தில் 1985 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே போராளியாக இணைந்து பயிற்சி பெற்றவர். பின்னர் 1990 காலப்பகுதியில் புலம்பெயர்ந்து பிரான்சுக்கு வந்ததிலிருந்து தமிழீழ விடுதலைக்கான தனது பணிகளைப் பிரான்சுக் கிளையுடன் இணைந்து முன்னெடுத்தவர். தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்று, 1990 காலப்பகுதியில் செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் முல்கவுஸ் பகுதியில் அன்பு தமிழ்க் கழகத்தை உருவாக்கினார். அதன் ஊடாகத் தாய்மொழி, கலை, பண்பாடு வளர்ச்சிக்காக இறுதிக்காலம் வரை உழைத்தார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன அழிப்பிற்குள்ளாக்கப்படுவதை அனைத்துலக ரீதியாக வெளிப்படுத்துவதற்கும் அவற்றிற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களுக்கும் வலுச் சேர்ப்பதாக இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்றிருந்த காலத்திலும், 2009 இற்குப் பின்னரான காலத்திலும் தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டார்.

இலட்சிய உறுதியும் நீண்ட காலச் செயற்பாட்டுப் பட்டறிவும் கொண்ட ஒரு மூத்த செயற்பாட்டாளரை நாம் இழந்து நிற்கிறோம். இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்களின் தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு இவர் ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.