பிலிப்பைன்ஸ் நாட்டின் இயற்கை எழிலை கண்டுகளிக்கவும் உல்லாசமாக பொழுதை கழிக்கவும் இங்கு வரும் வெளிநாட்டினரை அபு சய்யாப் என்ற தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி கடத்திச் செல்கின்றனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர்கள், கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்து மிகப் பெரிய தொகையை பெற்றுகொண்டு அவர்களை விடுவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் தெற்காசிய நாடுகளை சேர்ந்த பலர் இங்குள்ள தீவுகளில் குவிந்து வருகின்றனர். அவ்வகையில், இயற்கை எழில் கொஞ்சும் போஹோல் தீவுக்கு வந்துள்ள சில வெளிநாட்டினரை கடத்தி செல்வதற்காக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அபு சய்யாப் தீவிரவாதிகள் கடந்த 11-ம் தேதி அங்கு முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். தீவிரவாதிகள் நடத்திய எதிர் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய அபு சய்யாப் தீவிரவாதிகளில் ஆறுபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பியோடி விட்டனர்.
போஹோல் தீவுக்குட்பட்ட பகுதிகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை பிடிக்கும் வேட்டையின்போது மேலும் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

