ஊழல் மோசடியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சபையை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்ட இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ளார். கடந்த அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கமும் செயற்பட்டால் கோட்டபய ராஜபக்ஷவின் நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் ஊழல்மிக்க இலங்கை கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்த வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த பாராளுமன்றத்தில் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்டார். கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி பற்றி பேசப்பட்டது.
விளையாட்டுத்துறை சட்டத்தின் பிரகாரமே இலங்கை கிரிக்கெட் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் சபை பிறிதொரு கிரகத்தில் இருப்பதை போல் செயற்படுகிறது.
கிரிக்கெட் சபையின் மோசடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விளையாட்டுத்துறை சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிக்கு அப்போதைய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்ட அரசாங்கம் இன்று கிரிக்கெட் சபையிடம் மண்டியிட்டுள்ளது. சபையிடம் அதிகம் நிதி உள்ளது ஆகவே அந்த நிதியை ஏனைய விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு வழங்குங்கள் என்று சம்மி சில்வாவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் மண்டியிட்டுள்ளார்.
கிரிக்கெட் சபையின் மோசடி குறிப்பாக சம்மி சில்வாவின் மோசடி தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டுள்ளது. சித்ர ஸ்ரீ அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிரிக்கெட் சபையின் நிர்வாக குழுவுக்கான வாக்கெடுப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான யோசனைகள் கடந்த 2024.12.20 ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி தனக்கான அதிகாரங்களையும், தத்துவங்களையும் பயன்படுத்தி கிரிக்கெட் சபையின் நிர்வாக சபை வாக்கெடுப்பை இடைநிறுத்த வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கம் செயற்பட்டால் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றார்.

