தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்குவது தமிழின அழிப்புத் திட்டத்தின் நீட்சியே! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

251 0

போர் அரக்கனை ஏவி தமிழர்களை நேரடியாக அழித்தொழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு இன்று தமிழர்களின் தொழில்த்துறையை முடக்கி மறைமுகமாக அதனைத் தொடர்ந்து வருகின்றது.சிங்கள அரசு தமிழர்கள் மீது தொடரும் இனவழிப்பு யுத்தத்தின் கொடூரங்களையும் பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொண்டு தலைநிமிர்ந்து நாம் நிற்கின்றமைக்கு எமது பொருளாதாரப் பலமே அடிப்படைக் காரணமாகும். அதனை சிதைத்து எம்மை மண்டியிட வைக்கும் நோக்கிலேயே தொழில்துறைகளை முடக்கியும் வேலைவாய்ப்புகளில் திட்டமிட்ட புறக்கணிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழர் தாயகத்திற்குட்பட்ட நிர்வாக எல்லைக்குள்ளாகவே தகுதியான தமிழர்கள் இருக்கையில் வேண்டுமென்றே அவர்களைப் புறக்கணித்து சிங்களர்களை பணியிலமர்த்தும் போக்கு முழுவீச்சில் நடந்தேறிவருகிறது. இந்த வஞ்சகத்தால் பல்லாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகள் வேலையற்றவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இனவழிப்புப் போரின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போன தமது வாழ்வை தூக்கிநிறுத்தும் முனைப்பாக கடல்தொழிலை நம்பியிருக்கும் எமது மக்களின் நம்பிக்கையில் மண்ணைப்போடும் விதமாக சிறிலங்கா இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் சிங்கள மீனவர்களால் எமது மக்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

இது போதாதென்று எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய படையெடுப்பால் தாயகக் கடல்வளம் மட்டுமன்றி எம்மவர்களின் வாழ்வும் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.தத்தமது வல்லமைக்கு ஏற்றாற்போல் முதலிட்டு வியாபார நிறுவனங்களை அமைத்து கந்தலான தமது வாழ்வை சீர்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எமது மக்களை பாதிக்கும் வகையில் சிங்கள, இசுலாமிய, இந்திய வியாபாரிகளின் ஆதிக்கம் புற்றீசல்களாக பெருக்கெடுத்துள்ளது.

தமிழர்களின் பொருன்மியத்தை தூக்கி நிறுத்தும் விவசாயமும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவழிப்புச் செயற்பாட்டில் சீரழிக்கப்பட்டு வருகிறது. வளம்கொழிக்கும் விளை நிலங்களாக விளங்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் இராணுவத் தேவைகளுக்காக வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதுபோக மீதமிருக்கும் இடங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தமிழர்களுக்கு சிறிலங்கா அரசினால் எதுவித ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளும் கிடைப்பதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், நில மீட்பு விவகாரம், விதவைகள் விவகாரம், தாய்-தந்தை-உறவுகளை இழந்து தனித்துவிடப்பட்ட இளம்பராயத்தினர் விவகாரம், முன்நாள் போராளிகள் விவகாரம், மது-போதைப் பொருள் பயன்பாட்டினால் சமூகவிரோதிகள் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இளைய தலைமுறை, இந்தப்பின்னணியில் தலைகீழ் மாறுதல் கண்டிருக்கும் கல்விநிலை, கலை-கலாச்சாரம்-பண்பாட்டு ரீதியிலான சீரழிவு என தமிழர் தாயகத்தை சூழ்ந்திருக்கும் அத்தனை கொடுமைகளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தமிழர் தாயகத்து பாட்டாளிகளின் வாழ்வு சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலுக்குள் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழமைவில்தான் இம்முறையும் தொழிலாளர் தினத்தை எதிர்கொண்டு நிற்கின்றோம். இனவழிப்பு கொடுஞ்செயலுக்கு மத்தியில் போராட்டதுடன் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்களை அனைத்துலக தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மண்ணில் எமது வாழ்வை நாமே தீர்மானிக்கும் நிலையை உருவாக்குவது ஒன்றே இத்துன்பத்தில் இருந்து நிரந்தரமாக நாம் விடுபடுவதற்கு ஒரே வழியாகும். தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்ப்பாட்டின் வழி நின்று தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் இறுதிவரை உறுதியுடன் அணியமாவோம் என இன்றைய நாளில் உறுதியேற்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அ.னைத்துலக ஈழத்தமிழர் மக்களவை