சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் நீதி அமைச்சுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது

76 0

மக்கள் கோரிய மாற்றத்தை மேற்கொள்வது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும்போது பாரிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கே இருக்கிறது. அதனால் பொது மக்களுக்காக நாங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதுவருடத்தில் நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் கடமைகளை  ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை (01) நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பல வருடங்களாக மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றம் ஏற்பட்டு தற்போது புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்திருக்கிறது. புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரச சேவை புதிதாக நியமிக்கப்படவில்லை. என்றாலும் இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர அரச ஊழியர்கள் பாரியளவில் அர்ப்பணித்தார்கள். தபால் மூல வாக்குகளில் அது தெளிவாகியுள்ளது.

மேலும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்கு எமது அமைச்சுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. இந்த அமைச்சில் அமைச்சர், செயலாளர், மேலதிக செயலாளர் என பல்வேறு பதவிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உங்களுக்கு சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களே அன்றி கிரீடம் அல்ல. அதனால் எங்கள் அனைவருக்கும் பொறுப்புக்கள்  இருக்கின்றன. அவை மாற்றமடைய முடியும். அணியாக செயற்படும்போது அனைவரதும் பொறுப்புக்களும் முக்கியமாகும். அதனால் சிறந்த நோக்கத்துடன் முன்னுக்கு செல்வதற்கு அனைவருக்கும் முடியுமாகட்டும் என பிராத்திக்கிறேன் என்றார்.