நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறைமை 2024/2025 ஐ பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன் முறையொன்று கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024/25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறிப்பட்டுள்ளது.
அதற்கமைய, திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபா வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

