கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
அனலைதீவுக்கு நேற்று சனிக்கிழமை (21) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் விஜயம் செய்திருந்தனர்.
அதன்போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்துக்கூறப்பட்டது.
அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தாம் அறிந்துவைத்துள்ளதாகவும், குறிப்பாக மின்சாரம், படகுப் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் எமது அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால், அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு அப்பகுதியை அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


