உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தான் எமது ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டது. கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளுக்காக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று சனிக்கிழமை (21) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளோம். மறுசீரமைப்புகளுக்காக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளோம். நாடளாவிய ரீதியில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியாக செயற்படப் போவதில்லை. நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வெற்றியோடு எமது ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2029ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம் என்றார்.

