ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்கு பயணமானார் : வரவேற்புக்கு டில்லியில் ஏற்பாடு!

116 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15) நண்பகல் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியை வரவேற்க டில்லியில் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மேலும் பல உயர்மட்ட தரப்புக்களுடன் இரு நாடுகளினதும், பரஸ்பர நலன்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயமானது முற்றிலும் இருதரப்புக்கு அப்பாற்பட்ட தாக்கங்களைக் கொண்ட சம்பிரதாயமான ஒன்றாகவே அமைகிறது.

ஜனாதிபதியைப் பொறுத்தவரை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அதன் இந்திய எதிர்ப்பு நாட்களில் இருந்து எவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை வெளி அரங்கில் நிரூபித்துக் காட்டுவதற்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும்.

அதேபோன்று இந்தியாவைப் பொறுத்தவரை, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிராந்தியத்தில் உள்ள சிக்கலான பாதுகாப்புக் கவலைகளின் சுழலுக்கு எதிராக இலங்கையில் ஒரு நிலையான அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்ய இது ஒரு சிறப்பான வாய்ப்பாக கருதப்படுகிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்தி இலங்கை தரப்புடனான கலந்துரையாடல்களில் டெல்லி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் மன்னாரின் அதானி காற்றாலை மின் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையே நில இணைப்பு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) , பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், தேசிய அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி, திருகோணமலை பொருளாதார வலயம் உள்ளிட்ட  விடயங்கள் இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசியல் ரீதியாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் கவனத்தில் கொள்ளப்படும்.

13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் அல்லது மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவதில் டெல்லி கவனம் செலுத்தும்.

இதனை தவிர, இந்திய தேசிய பாதுகாப்பு விடயத்தில் என்றும் போல் டெல்லி இலங்கை தரப்புடன் கலந்துரையாடும்.

இந்தியாவின் தெற்கு கடல் பகுதியில் நம்பகமான பாதுகாப்பு பங்காளியாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே டெல்லியின் எதிர்பார்ப்பாகும். இதற்கான மூலோபாய உத்திரவாதத்தை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளில் டெல்லி ஆர்வம் செலுத்தும்.