இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால் மாத்திரமே பாக்கு நீரிணையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

104 0

இழுவைப்படகுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால் மாத்திரமே இலங்கையின் வட பகுதி மீனவர்களையும் தமிழ்நாட்டின் தினச்சம்பள மீனவர்களையும் பெரிதும் பாதிக்கின்ற நீண்டகால பாக்கு நீரிணை மீன்பிடி நெருக்கடிக்கு தீர்க்கமான முடிவைக் காணக்கூடியதாக இருக்கும் என்று இலங்கையின் கடற்தொழில், நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.

இந்த மீன்பிடி நெருக்கடி பல வருடங்களாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முக்கியமான ஒரு இராஜதந்திர பிரச்சினையாக நீடித்துவருகிறது. அடுத்தவாரம் இலங்கை ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும்  விஜயத்தின்போது இந்த பிரச்சினை ஆராயப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

” வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட சகல இனங்களையும் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எங்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு ) ஒரு பெரிய ஆணையைத் தந்திருக்கிறார்கள்.  அவர்களது அக்கறைகளை கவனித்து தீர்வு காணவேண்டிய ஒரு பொறுப்பு எமக்கு இருக்கிறது” என்று வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திரசேகர் கூறினார்.

” தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீ்னவர்கள் பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதன் விளைவான நீண்டகாலப் பிரச்சினை எமது வடபகுதி மீனவர் சமூகத்தின் முக்கியமான கவலையாக இருந்துவருகிறது”  என்று புதன்கிழமை ‘ த இந்து’ வுக்கு அவர் கூறினார்.

” இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி இலங்கையின் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாகும்” என்றும் சந்திரசேகர் கூறினார்.

2017 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆள்வீத மீன் நுகர்வளவு 17.2 கிலோவாக இருந்தது. தற்போது அது 11.07 கிலோவாக குறைந்துவிட்டது. இது மக்கள் புரதச்சத்தை உட்கொள்ளும் அளவின் வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2022 பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மந்தபோசாக்கு தீவிர கவனத்துக்குள்ளாகியிருக்கிறது.

” மக்கள் போதியளவு ஊட்டச்சத்தைப்  பெறுவதை உறுதிசெயவதற்கு நாம் கடலுணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டியது அவசியமாகும்.  அதற்காக நாம் எமது கடல் வளத்தையும் கடல்சார் உயிரின பல்வகைமையையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது” என்று அமைச்சர் கூறினார்.

கெடுதியான வழிமுறை 

விரைவாக குறைந்து கொண்டுபோகும் மீன்வளத்துக்கு மத்தியில் வாழ்வாதாரங்களுக்கான போட்டாபோட்டியே பாக்குநீரிணையில் இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான முரண்நிலைக்கு பெரிதும் காரணமாகும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பிராந்தியங்களை இரு தரப்பும் இணங்கிக்கொண்ட ஒரு கற்பனையான கடல் எல்லை பிரிக்கின்ற அதேவேளை, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதே பிரச்சினையின் அடிப்படையாகும் என்று வட இலங்கை மீனவர்கள் நீண்டகாலமாகச் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இழுவைப்படகுகள் பெருமளவு மீனையும் இறால்வகைகளையும் பிடிப்பதை இலக்காகக் கொண்டிருக்கின்ற அதேவேளை பெரிய வலைகள் மூலமாக கடல் படுக்கையில் இருந்து குஞ்சு மீன்களையும் முட்டைகளையும் கடல் தாவரங்களையும் வாரிக்கொண்டு வருகின்றன.

பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு  கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதி அதிகரித்ததுடன் பெரும் இலாபமும் கிடைத்தது.

2016 ஆம் ஆண்டில் இந்த பிரச்சினை இருதரப்பு சந்திப்பு ஒன்றில் ஆராய்ந்த பிறகு இந்தியாவும் இலங்கையும் கூட்டு செயற்பாட்டுக் குழு (Joint Working Group ) ஒன்று அமைத்தன. அந்த குழு பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட வேறு பல விடயங்களுக்கு மத்தியில் சாத்தியமானளவு விரைவாக இழுவைப்படகு நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கியும் செயற்படுவதற்கு இணங்கிக்கொண்டது. ஆனால், இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறை தொடரவே செய்தது என்று இலங்கையின் வடபகுதி கரையோரமாக வாழும் மீனவர்கள் தொடர்ந்து முறைப்பாடு செய்து வருகிறார்கள்.

இந்த மீனவர்கள் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த இலங்கையின் உள்நாட்டுப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட போதிலும் வடபகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள். அதற்கு பிரதான காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விவைவான பாதிப்புக்களேயாகும்.

2017 ஆம் ஆண்டில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதை தடைசெய்த இலங்கை 2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டு படகுகளுக்கு கடுமையான அபராதங்களை விதித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இலங்கையின் வடபகுதி மீனவர்களினால் இடையறாது கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த கெடுதியான மீன்பிடிமுறையை இன்னமும் கைவிடவில்லை.

மறுபுறத்தில், இழுவைப்படகுகளின் உரிமையாளர்களினால் தினச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தப்படும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதான குறறச்சாட்டில் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.. அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

2024ஆம் ஆண்டில் இதுவரையில்  இலங்கை கடற்படையினரால் கைதான மீனவர்களின் எண்ணிக்கை 530 க்கும் அதிகமாகும். கடந்த வருடத்தில் கைதானவர்களின் எண்ணிக்கையையும் விட இது இரு மடங்குக்கும் அதிகமாகும். 400 க்கும் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக  உத்தியோகபூர்வ தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

கடந்த புதன்கிழமை அமைச்சர் சந்திரசேகரை அவரது அலுவலகத்தில் சந்தித்த கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ” மீனவர் பிரச்சினைக்கு தீராவுகாண்பதில் மனிதாபிமான அடிப்படையிலானதும் பயனுறுதியுடையதுமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை ”  வலியுறுத்தினார். எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவொன்றைச் செய்த உயர்ஸ்தானிகர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் விரைவாக விடுவிக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

2022 பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா செய்த தருணமறிந்த முக்கியமான உதவியை இலங்கை பெரிதாக மதிக்கிறது. இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் உயர்வாக மதிக்கிறது என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.

“இந்தியா இலங்கையின் நெருங்கிய அயல்நாடும் முக்கியமான அபிவிருத்தி பங்காளியும் மாத்திரமல்ல, பொதுவான வரலாற்று ரீதியான கலாசார உறவுகளையும் கொண்ட நாடுமாகும். எமது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்” என்று இலங்கையின் பெருந்தோடடங்களில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களினால்  தமிழகத்தில் இருந்து  இரு நூற்றாண்டுகளுக்கு முனானர்  இலங்கைக்கு கூட்டிவரப்பட்ட தமிழ்ச் சமூகத்தை (மலையக தமிழர்கள்) சேர்ந்தவரான சந்திரசேகரன் கூறினார்.

“எங்களில் பலருக்கு இன்னமும் கூட தமிழ்நாட்டில் குடு்ம்பப் பிணைப்புகள் இருக்கின்றன” என்று கூறிய அவர் மீனவர் பிரச்சினையை பரந்த நோக்கோடு அணுகுமாறு  இந்திய அரசாங்கத்திடமும் தமிழ்நாடு அரசாங்கத்திடமும் மக்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

“மீனவர் பிரச்சினையை தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒன்றாக நோக்கும் மனப்பாங்கு  ஒன்று இருக்கிறது. ஆனால், இழுவைப்படகு மூலமான மீன்பிடி போரின்போது சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து பெரும் இழப்புகளைச் சந்தித்த இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை படுமோசமாப் பாதித்திருக்கிறது என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் சந்திரசேகரன்  கூறினார்.