அமைச்சர் லால்காந்த மக்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

82 0

அரசு என்ற முறையில், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காமல் மக்களின் கைகளில் விடுவதை ஏற்க முடியாது என சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சட்ட ஆலோசகர் ரவீந்திரநாத் தாபரே தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் கே.டி.யின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2024, டிசம்பர் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில், உரையாற்றிய லால்காந்த, விவசாயிகள் தமது பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை தீர்மானிப்பதில் சட்ட ரீதியான தடைகள் ஏதுமில்லை என வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தாபரே,  அமைச்சரின் கருத்துக்களில் உள்ள சட்ட குறைபாடுகளை எடுத்துரைத்துள்ளார்.

உதாரணமாக, இலங்கையில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் யானைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, பயிர் சேதத்திற்கு பதிலடியாக யானைகளை கொல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

மயில்களும் பாதுகாக்கப்பட்ட இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே, மயில்களை கொல்ல எந்த சட்ட விதியும் இல்லை என்று தாபரே குறிப்பிட்டுள்ளார்.