சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களது சொந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம்

275 0

சசிகலாவின் பேனர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதற்காக அகற்றவில்லை என்றும், அது தங்களின் சொந்த முடிவு என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்த உங்கள் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்:- நேற்று முன்தினம் (24-ந் தேதி), அழைப்பு விடுத்தோம். நேற்றும் (25-ந் தேதி) பேசி உள்ளோம். பதில் சொல்வதாக சொல்கிறார்கள். இதுவரை எந்த தகவலும் இல்லை. எப்போது சொன்னாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.

கேள்வி:- பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அவர்கள் தரப்பில் இருந்து உங்களை தொடர்பு கொண்டார்களா?

பதில்:- நேற்று அவர்களிடம் பேசினோம். அவர்கள் சொல்வதாக சொல்லி இருந்தார்கள். இன்று இதுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் குழு தலைவர் வைத்திலிங்கம், அவர்கள் குழுவினரிடம் தொடர்பு கொண்டு பேசினார். பேச்சுவார்த்தை நடத்த இன்று நல்ல நாள் என்று கூறினார். அவர்கள் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

கேள்வி:- கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டதை பேச்சுவார்த்தை நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக பேனர்களை அகற்றவில்லை. இது நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படி அகற்றினோம். இது எங்களது சொந்த முடிவு.

கேள்வி:- டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- டி.டி.வி.தினகரனுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம். அவரும் ஒதுங்கிவிட்டதாக சொல்லி விட்டார். அவர் மீது உள்ள வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார்.

கேள்வி:- உங்கள் கட்சியில் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் காலியாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

பதில்:- நாங்கள் அதை சொல்லவில்லை. நாங்கள் ஒதுங்கிவிட்டோம். அவ்வளவு தான். நாங்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

டி.டி.வி.தினகரனுக்கு சட்ட ரீதியான உதவிகள் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்றுவிட்டார்.