நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

311 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்த் தரப்பினர் மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, வடக்கு, கிழக்கில்எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கும் மூவின சமூகத்தினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதை இன்னமும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை, கோரிக்கைகளை மதிக்காமல் இந்த அரசு செயற்படுகின்றது. இதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நாம் அயராது உழைப்போம்.

காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்கள் யாழில் ஆர்ப்பாட்டம்,கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் முல்லைத்திவிலும் தொடர்கின்றது. ஏன் எங்கெல்லாம் தமிழல்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. இது ஒரு புறமிருக்க, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களை அறியும் போது நெஞ்சு வெட்டித்து விடும் போல் உள்ளது. அந்தளவுக்கு எங்கள் மக்கள் தாங்கொணாத் துன்பங்களை தம் இதயங்களில் சுமந்து கொண்டுள்ளனர். இதேநேரம் அவர்கள் சாட்சியம் அளிக்கின்ற போது- கூறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எங்கள் தமிழினம் அநாதையாக நிற்கின்றதோ என்று எண்ணத் தோன்றும். இருந்தும் அரசியல் தலைமைகளின் எந்தவித பக்க பலமும் இல்லாத போதும் காணாமல்போன தங்கள் உறவுகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம் என்ற துணிச்சலோடு அளித்த சாட்சியங்கள் கண்டு அழுகையிலும் எம் நெஞ்சம் உயர்ந்து கொள்கிறது.

“முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் தம்முடன் கூட வந்த தமது உறவுகளை இலங்கை அரச படைகளான இராணுவத்தினர் விசாரணை செய்துவிட்டு விடுவதாகக் கூறிக் கூட்டிச் சென்று இன்று வரை விடுவிக்காது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ளன.

இதே போல அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த தமது உறவுகளை அரசபடைகளால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதியில் தம் கண்முன்னேவட்டுவாகல் மற்றும்  ஓமந்தையில்   அரச படைகளிடம் சரணடைந்த தமது உறவுகளான போராளிகளும் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவத்தினராலும் அப்போது இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களாலும் முகாம்களில்  பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எங்குள்ளார்கள் என்று கண்டறிந்து அவர்களை மீட்க விரைந்து உதவுமாறு உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

தமது உறவுகளை தம் கண்முன்னே பிடித்துச் சென்ற அரச படைகளான இராணுவத்தினர் அவர்களை இராணுவ முகாம்களில் மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர்களை எந்த இராணுவ முகாமில் மறைத்து வைத்துள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தாம் சென்று பார்வையிட நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும்.

நாம் கடந்து வந்த பாதையை மறக்கும் போது, எம் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்கும் போது, நாம் போராடியதற்கான அடிப்படைகளை மறக்கும் போது, எம் மீது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கெதிரான வன்கொடுமைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கான நீதிக்காகப் போராடத்  தயங்கும் போது, சிங்கள தேசம் நினைப்பது கை கூடுதல் சாத்தியமே!
1000 வருடங்களுக்கு மேலாக தம் மண்ணைப் பிரிந்து உலகெங்கும் சிதறி ஓடிய இனங்கள் கூட தம் மண்ணை மீட்டெடுத்தற்கான காரணம், அவர்கள் எத்தனை காலம் உருண்டோடினாலும் தம் தேசத்தை மனதிலிருந்து அகற்றாததும் தமக்கான நீதி கிடைக்க சர்வதேசத்தின் கடமையை வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றதும் ஆகும்.
உலக நாடுகள் எம் பக்கம் திருப்பப்பட வேண்டும், எம் இன அழிப்பை புரிந்து கொள்ள வேண்டும், அதனைத் தடுத்து நிறுத்தும் சரியான காத்திரமான நடவடிக்கைளை எடுக்க வைக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் நிலைப்பாடு. உணர்வுடன் திரளும் தமிழ் மக்கள் தம் இனத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த உறுதி எடுக்க வேண்டும். பரிகார நீதி கிடைக்கும் வரை ஓய்வின்றி செயல்பட வேண்டும். விலைமதிப்பற்ற உயிர்த் தியாகங்களுக்கு செய்யும் தர்மம் இதுவேயாகும்.