மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்

368 0

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது.
விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது.

கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது.

முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் வலிகள் தமிழினத்தை மட்டுமல்ல உலகில் மனிதம் உள்ள அனைவரையும் உறையவைத்தது.

மே 18 ஈழத்தில் குறிப்பாக வன்னி வாழ் மக்களின் மிகத்துயரமான நாள். மாவீரர் நாள், சுனாமி நினைவு நாளில் உறவுகள் ஒன்றுகூடி விளக்கேற்றி கண்ணீரால் தம் கவலைகளை கரைப்பார்கள் . அதே போன்றே மே 18 இலும் முள்ளிவாய்காலில் உறவுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைக்கும் நாளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு களியாட்ட விழாவாக்கி தமிழ்தேசிய உணர்வை சிதைக்க முனைகின்றது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மேற்கொள்கின்றார்.

மாவை சேனாதிராஜா தமிழினத்தின் ஒரு கோடரிக் காம்பு. விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் தமிழின பற்றாளராக செயற்பட்டது உண்மைதான். பின்னர் சிறீலங்கா அரசாங்கத்திடம் விலைபோகிவிட்டார். சிறீலங்கா புலனாய்வு அமைப்பின் முகவராக அவரது செயற்பாடு அமைந்திருந்தது.

உலக அரசியல் ஒழுங்குக்கு அமைவாக தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டிய தேவையினால் மறப்போம்! மன்னிப்போம்! என்ற அடிப்படையில் தமிழ் தலைவர்கள் என தம்மைகூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனக் ஒழுங்குபடுத்திய விடயங்கள் நாம் அறிந்ததே.
குறிப்பாக மாவை சேனாதிராஜா ரணிலைப் போல் ஒரு தந்திரசாலி. இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகள் சரண்அடைய முற்பட்டவேளை அதாவது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் உள்ளிட்ட குழுவினரை சரணடைதலுக்கு மத்தியஸ்தம் வகிக்காமல் தொலைபேசியை அணைத்து விட்டு ஏ.சி அறைகளில் இருந்த கபடத்தனத்தை மறப்பதா?
இன்று முள்ளிவாக்கால் உணர்வை மூழ்கடிக்க செய்யும் முயற்சியை மன்னிப்பதா?

அக்கினிச்சிறகுகளுக்குள் அடைபட்டுள்ள இனத்திற்கு“ அக்கினி சிறகுகள்” என ஒர் அமைப்பை உருவாக்கி உதைபந்தாட்ட போட்டி என எம் மக்களை உதைக்கிறார் மாவை.
“அக்கினிச்சிறகுகள்“ அணி தமிழ்தேசப்பற்று அணி என காட்டிக்கொள்ள இன்று இவ் அணியைச்சேர்தவர்களை கிளிநொச்சியில் பயங்கரவாத புலனாய்வு அமைப்பு(ரீ.ஜ.டீ) விசாரித்தாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் சிறீலங்கா புலனாய்வின் மூத்த முகவர் மாவை.

இன்று (24) ஊடகவியலாளர்களை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகவியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது உண்மையில் போராடும் மக்களிற்காக குரல் கொடுப்பதும் அவர்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதும் தான் அந்த மக்கள் பிரதிநிதிகளின்; கடமையாகும்.அதனை விடுத்து மக்களினை மிரட்டுவதல்ல.

உண்மையில் மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை மாவை போன்றவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.மஹிந்த வந்தால் தமிழ் மக்களிற்கு ஏதும் இனி நடக்க எஞ்சியிருக்கவில்லை.சிலவேளை மாவை போன்றவர்கள் வகித்துவரும் பதவிகள் பறிபோகலாம்.

இதே போன்றே மிகப்பெரியதொரு விடுதலைப்போராட்டத்தின் முடிவினில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ள நிலையினில் அவர்களது உறவுகளுடன் இணைந்து துன்பத்தினில் பங்கெடுப்பதே பிரதானமாகும்.இதை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரினில் நடத்தப்படும் உதைபந்தாட்ட களியாட்ட போட்டியினில் பங்கெடுத்து அதற்கும் மாவை சேனாதிராசா விளக்கமளித்துள்ளார்.

இவ்விளையாட்டுப்போட்டியின் பின்னணியினில் யாருள்ளார் என்பதனை நான் அறியேன்.உண்மையினில் மாவையின் மூளை கறள்கட்டிவிட்டதாவென்ற சந்தேகம் அவரது அண்மைய உரைகள் மூலம் எழுவதாகவும் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார்.

முள்ளிவாய்காலின் நினைவுகளில் நாம் நனையும் போது மாவை மாவிட்டபுர கனவு இல்லத்தை நோக்கி சிறகடித்துக் கொண்டிருப்பார். அவரது மாளிகையின் பெறுமதிக்கு எம் இனத்தில் உயிர்கள் விலையாகியது பலருக்கு புரியாத விடயம்.

வட்சலா அருள்வேந்தன்