தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம்: திருவாரூரில் ஸ்டாலின் கைது

306 0

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 40 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அனைத்து கட்சிகள் சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையைப் பொருத்தவரை நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளான பாரிமுனை, தி.நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய போராட்டம் வெற்றிக்கரமாக நடைபெற்று வருகிறது.

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மற்றும் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் கட்சி கொடிகளுடன் சென்ற திமுகவினர் திடீர் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர்.

அங்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகுமாறு வலியுறுத்தினர். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய போராட்டம் வெற்றிக்கரமான முறையில் நடைபெற்று வருகிறது.

அனைத்து மாவட்டங்களின் முக்கிய பெருநகரங்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட பகுதிகிளில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய வெறிச்சோடி காணப்படுகின்றன.  அரசு பேருந்துகளும் மிக குறைவான அளவிலேயே இயங்குகின்றன. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி போன்ற பொது போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இன்று காலை நிலவரப்படி தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய மறியல் போராட்டம் மிக வெற்றிக்கரமான போராட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.