அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்?

382 0

தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு சர்ச்சைகள், சங்கடங்கள் அணி வகுத்து நிற்பது, இதுவரை இருந்த முன்னுதாரணங்களை முறியடித்து விட்டது.

அ.தி.மு.கவின் அம்மா அணியாக இருக்கும் தினகரன், ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசாங்கத்தின் அனல்காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யத் தயாரிக்கப்பட்ட பட்டியல், வருமான வரித்துறையிடம் சிக்கியதும், அ.தி.மு.க அம்மா அணியின் எதிர்காலமும் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்காலமும் இணைந்தே கேள்விக்குறியானது.

முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், ஆர்.கே. நகர் பண விநியோக விவகாரத்தில் இப்படி சிக்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மாட்டிக் கொண்டவர்கள் மார்க்கம் தேடி, முட்டி மோதிக் கொண்டார்கள். அந்த மார்க்கம்தான் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.கவிலிருந்து ஒதுக்கி வைக்கிறோம் என்ற அதிரடி அறிவிப்பு. தினகரன் ஒதுங்கி விட்டார்; சசிகலாவும் ஜெயிலில் இருக்கிறார். ஆனால், அவர்கள் வழி காட்டிய ஆட்சி மட்டும், முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெறுகிறது.

தினகரனை நீக்கி விட்டு, மத்திய அரசாங்கத்தின் கோபத்தில் இருந்து தப்பித்த முதலமைச்சர் எடப்பாடி அணி, அடுத்து, ‘அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா’ அணியின் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைப்பு முயற்சியை எடுத்துச் செல்ல முயற்சி செய்தது. அதன் முதல் கட்டமாக, மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்தார்; மாநில ஆளுநரையும் சந்தித்தார்.

“தினகரனை நீக்கி விட்டு வந்தால், பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்” என்று கூறிய ஓ. பன்னீர் செல்வத்தின் பேட்டியைத் தலைமைச் செயலகத்தில் நின்று கொண்டே வரவேற்றார் தம்பித்துரை. இந்த வரவேற்பைத் தொடர்ந்து, இரு அணிகள் இணைப்புக் குறித்த பரபரப்பு பேட்டிகள், போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து கொண் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதும் தினகரன் கலாட்டா செய்வார். அதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழும். ஆகவே, ஆட்சியும் கட்சியும் நம் கைவசம் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருதியிருந்தார். ஆனால், தினகரனோ “நான் விலகுவதால் கட்சியும், ஆட்சியும் நிலைத்து நிற்கும் என்றால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று கூறியது, மொத்த விளையாட்டின் திசையையே திருப்பி விட்டது.

எடப்பாடி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும், தினகரனை ஓரங்கட்டியதற்காக “ஆட்சிக்கு ஆதரவு தர மாட்டோம்” என்று கூறவில்லை. “ஆட்சி தொடர நாங்கள் ஆதரவு அளிப்போம். கட்சியும், ஆட்சியும் நிலைக்க வேண்டும். இரட்டை இலை திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று கூறி விட்டார்கள். தினகரன் விலகிய பிறகும், எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவியில் தொடர எந்தவித ஆபத்தும் வரவில்லை என்பது ஓ. பன்னீர் செல்வத்தின் “நிபந்தனை விதிக்கும்” அதிகாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

குறிப்பாக, முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பதும் மற்ற அமைச்சர்களின் வாயிலாகப் பேட்டியாக வெளி வந்தது. சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க அம்மா அணியை வழி நடத்துவது ஒன்றே ஓ. பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் பெற்றுத் தந்தது; அ.தி.மு.கவினர் மத்தியிலும் ஆதரவை பெற்றுத் தந்தது. ஆனால், சசிகலாவும் தினகரனும் நீக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க ஆதரவும் மக்கள் அனுதாபமும் ஓ. பன்னீர்செல்வத்துக்குக் குறையத் தொடங்கியது. ஒரே இரவில் இப்படியொரு அதிர்ச்சிதரும் நிலை ஏற்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இதை எடப்பாடி பழனிச்சாமி அணியும் எதிர்பார்த்தே, ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பதவியை கொடுப்பது குறித்தோ, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வழங்குவது குறித்தோ எந்தக் கருத்தையும் கூறவில்லை.

இப்படியொரு சூழ்நிலையில்தான், ‘இரு அணிகள் இணைப்பு’ பற்றி என்ன முடிவு எடுப்பது என்று தன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ஓ. பன்னீர்செல்வம். அக்கூட்டத்தில், “நாம் அ.தி.மு.க அம்மா அணியுடன் இணைந்தால் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து விடுவோம். முதலமைச்சர் பதவி கிடைத்தால் மட்டுமே, நாம் அந்த இணைப்புப் பற்றிப் பேச முடியும்” என்றும் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.

கூட்டம் முடிந்து பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை, சசிகலா குடும்பத்தையே அ.தி.மு.கவிலிருந்து விலக்கி வைப்பது, தேர்தல் ஆணையத்தில் சசிகலா பொதுச் செயலாளர் என்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெறுவது, தினகரன், சசிகலா இருவரும் தங்கள் கட்சிப் பதவிகளை இராஜினாமாச் செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளை முதலில் ஏற்கட்டும்; அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும்” என்று சொன்னதோடு மட்டுமின்றி, “சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார் என்ற கருத்தின் உள்நோக்கம் என்னவென்றால், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா தேர்வு செய்த முதலமைச்சர்; அவரை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான். இந்தப் பேட்டியின் இன்னொரு அர்த்தம், முதலமைச்சர் பதவி ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையாகும். ஆனால், இந்த நிபந்தனைக்கு அ.தி.மு.க அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் சம்மதிக்கவில்லை. அதனால், நிதியமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் போன்றோர் ஓ. பன்னீர்செல்வம் அணி மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார்கள். அந்தத் தாக்குதலின் விளைவாக, இணைப்பு முயற்சி அந்தரத்தில் தொங்குகிறது. இப்போதைக்கு அ.தி.மு.க அம்மா அணி சார்பில், இணைப்புப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு போடப்பட்டிருந்தாலும், ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் குழு போடப்படுமா, பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்களா என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வத்தின் இணைப்பு முயற்சி தொங்கிக் கொண்டு நிற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் குறிப்பாக, மத்திய அரசாங்கத்துடன் ஓ. பன்னீர்செல்வத்தை விட நெருக்கமாகச் செல்கிறார். நாடு முழுவதும், முதலமைச்சர்கள் தங்கள் கார்களில் சிவப்பு விளக்குகளை அகற்றி விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதை பா.ஜ.க மாநில முதலமைச்சர்கள் முதலில் நிறைவேற்றினார்கள். பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர் ஒருவர், உடனடியாக நிறைவேற்றி, தன் காரில் உள்ள சிவப்பு விளக்கைத் தானே கழற்றியது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே!

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தை எவ்விதத்திலும் முறைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக இருக்கிறார். ஆகவே, இன்றைய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நீடிக்கிறது. ஆனால், அவசரப்பட்டு “இணைப்பு முயற்சிக்கு நிபந்தனைகள் இல்லாமல் தயார்” என்றும், பிறகு “நிபந்தனைகளுடன் தயார்” என்றும் மாறி மாறி அறிவித்து, தன் அணிக்கு மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் இருந்து ஆதரவையும் அனுதாபத்தையும் குறைத்துக் கொண்டு விட்டார் ஓ. பன்னீர்செல்வம். சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிரான தர்மயுத்தம் முடிந்து விட்டது போன்ற சூழ்நிலை ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டு, இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சியும் கட்சியும் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படத் தொடங்கியுள்ளன.

அதேபோல் இதுவரை, சசிகலா, தினகரன் எதிர்ப்பில் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்த அ.தி.மு.கவினர் இனிமேல் அவர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பதற்காகத் திரும்பக் கூடும். அப்படி நிகழ்ந்தால், ஓ. பன்னீர் செல்வம் ஆரம்பித்த தர்மயுத்தம், எந்தவொரு தேர்தலையும் சந்திக்கும் முன்பே நிறைவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி விட்டது. சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க அம்மா அணியில் இருந்தால் மட்டுமே ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஜொலிக்கும். அந்த இருவரும் இல்லாத இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அ.தி.மு.க அம்மா அணி தொடர வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

அதனால்தான் தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், “இரு அணிகளுமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களுக்கு இரட்டை இலைச் சின்னமோ, அ.தி.மு.கவோ முக்கியமல்ல; மத்திய அரசாங்கத்தின் வருமான வரித்துறை சோதனைகள் மற்றும் ஆறு வருட அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இணைப்பு என்று நாடகம் ஆடுகிறார்கள்.

ஊழல் சாம்ராஜ்யத்தை மீண்டும் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து உருவாக்கவே இந்த முயற்சி” என்று காட்டமாக அறிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், இப்போதைக்கு அ.தி.மு.கவுக்குள் உள்ள இரு அணிகளில் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ‘வேகத் தடை’ உருவாகி விட்டது. இது நிரந்தரமானால் பன்னீரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் என்பதே தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம்.