அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

218 0

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்த வழக்கை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்கள் கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் சிவக்குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனுவில், ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுபோல, சேலம் மத்திய கூட்டுறவு வங்கியிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த சோதனைக்கு பின்னர் முறையான விசாரணை நடக்கவில்லை. எனவே இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஆவணங்களை கொண்டு சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் நடைபெறும் விசாரணை தற்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. அந்த விசாரணையை திசை திருப்ப, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.